சிதம்பரம்:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 22-வது மாநாடு பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியாவை மீட்போம், தமிழகத்தை காப்போம் என்கிற தலைப்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு கோவையில் வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர்ரெட்டி, மாநில துணை செயலாளர் சுப்பராயன், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, திராவிடர் கழக தலைவர் வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், ம.தி. மு.க. தலைவர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு பேசுகிறர்கள்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி சொன்ன தேர்தல் வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. 45 ஆண்டுகளுக்கு முன் இல்லாத அளவில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலை தருவதாக மோடி தெரிவித்தார். இதை நம்பி வாக்களித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.

தற்போது சென்னையில் 14 துப்புரவு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதற்கு 10 ஆயிரம் பேர் விண்ணப்பத்திருந்தனர். அதில் அதிகமானவர்கள் பட்டதாரிகளே. இதுபோன்ற நிலைமை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. தமிழக மக்களை பற்றி கவலைப்படாத பிரதமர் மோடி, வாக்குறுதிகள் வழங்குவதில் மன்னர். அவர் மக்களையும் பாராளுமன்றத்தையும் ஏமாற்றிவருகிறார்.

வருகின்ற பாராளுமன்ற தேர்தலின் போது, தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தவேண்டும். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இருக்கவேண்டும், அடிமையாக இருக்கக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here