திருவள்ளூர், சனவரி. 25 –

தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் செய்தியாளர் மாறன் ….

திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதி நியூஸ் 7 செய்தியாளர் நேசபிரபுவை, மர்ம கும்பல் ஒன்று அவர் உடலில் 15 க்கும் மேற்பட்டப் பகுதியில் கொலை வெறித் தாக்குதலை நடத்திவுள்ளதாக தெரியவருகிறது. இந்நிலையில் அக் கொலை வெறிக்கும்பலால் தாக்குதலுக்குள்ளான செய்தியாளர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஆபத்தான நிலையில்  அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இந்நிலையில் அந்த மர்மக் கும்பலின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், அவர்களையும் அவர்களுக்கு பின்னிருந்து இயக்கிய உண்மைக் குற்றவாளியையும் கைது செய்திடவும், மேலும் தொடர்ந்து சமூக விரோதிகளால் தாக்குதலுக்கு உள்ளாகும் பத்திரிகையாளர்களுக்கு அரசு உரிய பாதுகாப்பினை உறுதிப்படுத்திடவும், மேலும் பத்திரிகையாளர்கள் தங்கள் பணியை சுதந்திரமாக செய்திட அரசு உறுதியளித்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவள்ளூர் மாவட்ட பத்திரிகையாளர் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு ஒன்று சேர்ந்தும், தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மீது சமூக விரோதிகளால் ஏற்படும் தாக்குதல்களை கட்டுப்படுத்தாத அரசுக்கு கண்டனத்தை தெரியப்படுத்தும் வகையில் சட்டையில்  கருப்பு பேட்ஜ் அணிந்தும் ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு சாலையில் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மேலும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் நடவடிக்கை எடு, நடவடிக்கை எடு, காவல்துறையினரே நடவடிக்கை எடு, என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியவாறு  கண்டன முழக்கங்களை உரக்க எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தொடர்ந்து 100 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலையில்   கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர காவல் துறையினர்  சாலை மறியலில் ஈடுபட்ட பத்திரிகையாளர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில்  ஈடுபட்டதை தொடர்ந்து, இருவர்களுக்கிடையே சுமூகமான நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுப்பட்ட அனைவரும் ஆர்ப்பாட்டதை கைவிட்டு அமைதியாக அங்கிருந்து கலைந்து சென்றனர்.

திருவள்ளூர் மாவட்ட பத்திரிகையாளர்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தால், திருவள்ளூர் நகரம் முழுவதும் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மூத்த பத்திரிக்கையாளர் தெரிவிக்கும் போது, குற்றவாளிகளை தாமதம் இன்றி உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், இச்செயலில் ஈடுபட காரணமான உண்மை குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டறிந்து அவர்கள் மீது தயவு தாட்சனையின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியாளர் நேசபிரபுக்கு  தமிழக அரசு சார்பில் உயர் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பத்திரிக்கையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும். பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here