நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கைத் தாக்கல், வேளாண்மைத் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை, அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்பிற்கான 7.5 சதவிகித ஒதுக்கீடு போன்றவை இக்கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப் படவுள்ளது.
சென்னை, ஆக 4 –
தமிழக சட்ட மன்றக் கூட்டத்தொடர் வரும் ஆக 13 ஆம் தேதி அன்று நடைப் பெறவுள்ளது இந் நிலையில் இன்று ஆக 4-2021 தமிழக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப் பட்டன.
அதில் வரும் ஆக 13 வெள்ளிக்கிழமை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நடப்பு ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்யத் தீர்மானிக்கப் பட்டுள்ளது.
வேளாண்மைத் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை நடப்புக் கூட்டத் தொடரிலயே தாக்கல் செய்யப்பட முடிவு எடுக்கப் பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற் கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவாக இருந்ததைக் கருத்தில் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் தொழிற்கல்வி பயிலுவதற்குத் தடையாக உள்ள காரணிகள் என்ன வென்று ஆய்வு செய்வதற்கும் அவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கவும் எடுக்கப் பட வேண்டிய நடவடிக்கைகளை கண்டறிந்து உரிய தீர்வுகளை பரிந்துரைகளைச் செய்திடவும் ஓய்வுப் பெற்ற தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி த.முருகேசன் அவர்கள் தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட்டு அவ்வாணயத்தின் அறிக்கைப் பெறப்பட்டுள்ளது.
அந்த ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று அதனைச் செயல் படுத்தும் விதமாக மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கியதைப் போன்றே அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு ஏனைய தொழிற் கல்விப் படிப்புகளில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட முன்வடிவினை நடப்புச் சட்டமன்ற கூட்டத் தொடரிலயே அறிமுகம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.


















