மீஞ்சூர், டிச. 23 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்திற்கு பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை வகித்தார், செயல் அலுவலர் வெற்றியரசு,துணைத் தலைவர் அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
அம்மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இளநிலை உதவியாளர் அன்பரசு வாசித்தார், அதனைத் தொடர்ந்து பேசிய கவுன்சிலர்கள் சமீபத்தில் பெய்த பெரும் மழையால் சாலைகள், மின்விளக்குகள், குடிதண்ணீர் நீர்தேக்கத் தொட்டிகள், அரசு கட்டிடங்கள் உள்ளிட்டவைகள் பெருத்த சேதம் ஆகி இருப்பதாகவும், அதனை சீரமைக்க நிதி உதவி தேவைப்படுவதாகவும், தெரிவித்தனர்.
மேலும், பொதுக்கழிப்பிடம், இறைச்சி விற்பனை கூடம் அமைத்தல் தெருநாய்களை கட்டுப்படுத்துதல், சாலையில் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தல், உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து அம்மன்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பின்பு அத் தீர்மானங்களை தலைவரின் பார்வைக்கு வைத்தனர்.
இதில் துரைவேல் பாண்டியன், சுமதி தமிழ் உதயன், சுகன்யா வெங்கடேசன், அபூபக்கர், நக்கீரன், கவிதா சங்கர், உள்ளிட்ட 16 கவுன்சிலர்கள் மற்றும் துப்புரவுபணி மேற்பார்வையாளர் கோபி, எலக்ட்ரிக்கல் மொய்தீன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்,
மேலும் மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி 18 வார்டுகளிலும் பணி புரியும் தூய்மை பணியாளர்கள், ஜே.சி.பி. ஆபரேட்டர்கள், குடி தண்ணீர் ஆப்பரேட்டர்கள், மின்விளக்கு பழுது பார்க்கும் பணியாளர்கள், மற்றும் பேரூராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் ஆகியோர் கடந்த மிக்ஜாம் புயல் மழையின் போது, மிகவும் சிறப்பாக பணியாற்றியமைக்காக அவர்களுக்கு பாரட்டுத் தெரிவிக்கும் விதமாக அறுசுவை உணவு வழங்கப்பட்டு அவர்களை மன்ற உறுப்பினர்கள் கௌரவித்தார்கள்.






















