சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அய்யன் திருவள்ளுவரை சிறுமைப்படுத்தி,திரிபு வாதத்தை முன்வைத்த முன்னாள் தொல்லியியல் அதிகாரி நாகசாமியை, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் “குடியரசுத் தலைவர் விருதுகளை”த் தேர்வு செய்யும் கமிட்டியில் உறுப்பினராக நியமித்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் மொழிக்கு எதிராகவும், தமிழ் கலாச்சாரத்தினை தன் மனம் போன போக்கில் திரித்து பா.ஜ.க. மற்றும் மதவாத சக்திகளின் கவனத்தைத் தன்பால் திருப்பிடும் நோக்கில் எழுதி வரும் அவருக்கு ஏற்கனவே பத்மவிபூசன் விருதை வழங்கி கவுரவித்துள்ள பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திலும் ஒரு பொறுப்பினை வழங்கி செம்மொழித் தமிழுக்கும் பேரிழுக்கு ஏற்படுத்த முயற்சி செய்து பார்த்திருக்கிறது.

கடந்த ஐந்தாண்டு காலத்தில் படிப்படியாக நிதி குறைக்கப்பட்டு தமிழ் மொழி பற்றி எந்த ஆய்வுகளுமே மேற்கொள்ள முடியாமல் அந்நிறுவனம் தத்தளித்து நிற்கிறது. செம்மொழி தமிழாய்வு நிறுவன விருதுகளையும் அறிவிக்காமல் தமிழ் அறிஞர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் அங்கீகாரம் வழங்குவதையோ, விருதுகள் வழங்கி கவுரவிப்பதையோ, கலைஞர் பெயரில் அமைந்துள்ள சிறப்பு விருதையோ, பா.ஜ.க. அரசு வஞ்சக எண்ணத்துடன் தடுத்து நிறுத்தியிருந்தது.
இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற நேரத்தில் அவசர அவசரமாக தமிழ்நாட்டு மக்களை இதன் மூலமாகவும் ஏமாற்றி விட வேண்டும் என்ற தீய உள்நோக்கத்துடன் இப்போது “விருது கமிட்டி” ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்னைத் தமிழாம் செம்மொழித் தமிழ் மீது அடர்த்தியான நஞ்சைக்கக்கும் நாகசாமி செம்மொழி தமிழாய்வு விருதுகளை தேர்வு செய்யும் கமிட்டியில் இடம்பெற்றிருக்கிறார். தமிழர்களை அவர்களின் உணர்வுகளை கிள்ளுக்கீரையாக எண்ணி மத்திய பா.ஜ.க. அரசு அவமானப்படுத்துகிறது.
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் தலைவராக இருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சூட்சுமத்தைப் புரிந்து கொள்ளாமல், வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தமிழ்மொழிக்குச் செய்யும் மாபெரும் துரோகம் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
ஆகவே செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் “குடியரசுத் தலைவர் விருதுகள் தேர்வு செய்யும் கமிட்டியில்” உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நாக சாமியை உடனடியாக பதவி நீக்கம் செய்து விட்டு, ஆழமான தமிழ்ப் பின்னணியும் ஆராய்ச்சிப் புலமையும் மிக்க நல்ல தமிழறிஞர்களை அக்குழுவில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகரை கேட்டுக் கொள்கிறேன்.
தேர்தல் பரபரப்பைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழர்களின் உணர்வுடன் “விபரீத விளையாட்டு” நடத்த வேண்டாம் என்றும் மத்திய பா.ஜ.க. அரசை எச்சரிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here