பொன்னேரி, ஏப். 30 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பெரவள்ளூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள பல ஆண்டு கால பழமையான ஸ்ரீ வைத்தியநாத ஆத்மலிங்கேஸ்வரர் உடனுறை தையல்நாயகி அம்மன் திருக்கோவில் புனரமைக்கப்பட்டு கோபுரத்திற்கும் விமானங்களுக்கும் கடந்த மாதம் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது.
அதன் பின் திருக்கல்யாணமும் தொடர்ந்து 47 நாட்கள் அபிஷேக ஆராதனைகளுடன் கூடிய பூஜைகள் நடைபெற்று 48 வது நாளான இன்று மண்டலபூஜை நடைபெற்றது. வைத்தியநாத ஆத்மலிங்கேஸ்வரருக்கு பக்தர்கள் தங்கள் கரங்களால் 108 சங்கில் தீர்த்தங்களைக் கொண்டு சங்காபிஷேகம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெரவள்ளூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.
























