சென்னை புறநகர் பகுதிகளில் 200 ரூபாய் கள்ளநோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்ட 6 பேரை கைது செய்து மணலிபுதுநகர் போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொன்னேரி, ஏப். 12 –

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மணலி புதுநகரில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமாக ஆட்கள் தங்கியிருப்பதாக அவ்வீட்டின் அருகேவுள்ளவர்கள் நேற்று மாலை மணலிபுதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து அங்கு சென்ற போலீஸார் அதிரடியாக அந்த வீட்டுக்குள் நுழைந்துப் பார்த்தபோது அங்கு ஆறு பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓட முயன்றது. உடனே அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார் வீட்டிற்கு உள்ளே சென்று மேலும் சோதனையிட்டதில், கட்டு கட்டாக 200 ரூபாய்  நோட்டுகளும் அதன் பக்கத்திலேயே கலர் ஜெராக்ஸ் எடுக்கும் மிஷின்களும் இருந்தது தெரியவந்தது.

 

அதனைத்தொடர்ந்து, அங்கிருந்த அந்த ஆறு பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அவ்விசாரணையில் மணலி புது நகரை சேர்ந்த யுவராஜ் (37), மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (33), புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் இம்தியாஸ் (24), திருவொற்றியூர் தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஜோசப் (31), வியாசர்பாடி சேர்ந்தவர் ரசூல்கான் (38), செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் முபாரக் (38) எனத்தெரிய வந்தது.

 

இவர்கள் 6 பேரும் நண்பர்கள் எனவும், ரசூல்கான் ஆலோசனையின் பேரில் கள்ளநோட்டு தயாரிக்க யுவராஜ் மற்றும் சக நண்பர்கள்  சேர்ந்து திட்டமிட்டது போலீசாரின் தொடர் விசாரணையில் தொரியவந்துள்ளது.

 

மேலும் இதற்காக இவர்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மணலி புதுநகரில் உள்ள  இந்த வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர்.கள்ள நோட்டு அச்சடிப்பதற்காக அதற்கான 2 கலர் ஜெராக்ஸ் மிஷின்கள் மற்றும் தரமான வெள்ளைக் காகிதம் போன்ற உபகரணங்களை வாங்கியுள்ளனர். அதனைக் கொண்டு 200 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து அதை புறநகர் பகுதிகளில் புழக்கத்தில் விட்டுள்ளனர். இதற்காக சுமார் ரூபாய் 11 லட்சம்  யுவராஜ் செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் நேற்று 200 ரூபாய் நோட்டுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டு பிரிண்ட் செய்ய வேண்டுமென்று யுவராஜ் கூறியுள்ளார். அதற்கு 500 ரூபாய் நோட்டு ஜெராக்ஸ் எடுத்தால் போலீசாரிடம் சிக்கிக் கொள்வோம் என ரசூல் தெரிவித்துள்ளார்.  இதனால் யுவராஜ்க்கும் ரஸூலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அதை மற்றவர்கள் சமாதானம் செய்ய அங்கு இங்கும்  நடமாடியதால்  சந்தேகமடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 

மேலும், அங்கு அச்சடித்து வைத்திருந்த பல லட்ச ரூபாய் கள்ள நோட்டுகள், ஜெராக்ஸ் மெஷின் மற்றும் வெள்ளை பேப்பர் பண்டல்கள்,  ஒரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விசாரணையின் முழுமையடைந்த பின்தான்  இவர்களின் பின்னணி, இதுவரை புழக்கத்தில் விடப்பட்ட பணத்தின் மதிப்பு, புழக்கத்தில் விட மேற்கொண்ட யுக்தி, இவர்களுக்கான ஏஜெண்டுகள் உள்ளனரா போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கான முழுமையான விவரங்கள் தெரிய வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here