திருவள்ளூர், மார்ச். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகர் கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் காதர்பாட்ஷா. இவர் அதே பகுதியில் சோபா மற்றும் மெத்தை. நாற்காலிகள் போன்றவற்றைகளை புதிதாக தயாரித்து விற்பனை செய்வதும் மேலும் பழைய பொருட்கள் கொண்டு வந்தால் அதை சீரமைத்து தரும் பணியையும் அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கடையில் பணி ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென கடையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக கடையில் வைக்கப்பட்டுள்ள பஞ்சில் தீப்பற்றி கடை முழுவதும் வேகமாக தீ பரவியது.
உடனடியாக அவ்விபத்துக் குறித்து கடை உரிமையாளர் தீயணைப்பு துறையினருக்கும், காவல் துறையினருக்கும் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும் பஞ்சு மற்றும் தேங்காய் நார், போன்ற உடனடியாக பற்றி எரியக்கூடிய தன்மை உள்ள பொருட்கள் கடையில் இருந்ததால் அனைத்து பொருட்களும் தீயில் கருகி சாம்பலானது. அதன் மதிப்பு சுமார் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கருகிப் போனதாக உரிமையாளர் காதர் பாஷா தெரிவித்தார்.
பின்னர் காதர்பாட்ஷா கொடுத்த புகாரின் பேரில் மணவாளநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குடியிருப்பு நிறைந்த பகுதியில் இது போன்ற தீ விபத்து நடந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.























