திருவாரூர், நவ. 30 –
இன்று மயிலாடுதுறையில் இருந்து திருவாரூருக்கு வந்த அரசு பேருந்தில் பயணித்தவர்களுக்கு சாலையில் செல்கிறோமா அல்லது பேருந்தில் செல்கிறோமா என்ற வித்தியாசம் தெரியாத அளவிற்கு பேருந்தின் உள்ளே ஆங்காங்கே மழைநீர் கொட்டியதால் பயணிகள் குடைபிடித்தவாறும், தலையில் தூண்டினை போட்டுக்கொண்டும் பயணிக்கும் அவலநிலை ஏற்பட்டது.
மேலும் அப்பேருந்தில் பயணித்த பொதுமக்கள் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் ஒவ்வொருவரும் மழையில் நனையாதவாறு இருக்க அரசு குடை கொடுக்க வேண்டுமென வேடிக்கையாக அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் தெரிவிக்கும் போது, இதுப்போன்ற வாகனங்களை மறு சீரமைப்பு செய்து வழித்தடங்களில் அரசு பயன்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இதுப் போன்ற வாகனங்களை தொடர்ந்து அரசு இயக்குவதால் எதிர் பாராத விபத்துக்கள் எதிர்காலத்தில் ஏற்பட வாய்ப்புவுள்ளதாகவும், அதனால் உடல் காயம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட நேரிடவும் வாய்ப்புகள் உள்ளதென அப்போது அவர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
எல்லாத் துறைகளிலும் மேன்மை அடைந்து வருவதாக தெரிவிக்கும் தமிழ்நாடு அரசு தினசரி எண்ணிலடங்கா ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயணிக்கும் பேருந்துகளை சரிவர பராமரிப்பு செய்யாமல் அலட்சியப் போக்கை கடைப்பிடிப்பதேன் என்றவாறும் அரசை நோக்கி பயணிகள் கேள்விகளை எழுப்புகின்றனர்.
பல்வேறு குறைப்பாடுகளை உடனுக்குடன் எடுத்து வரும் தமிழ்நாடு அரசு இதுப்போன்ற முக்கிய துறையில் உள்ள குறைபாடுகளையும் உடனடியாக கலைந்திட வேண்டும் என தெரிவிக்கின்றனர்.





















