கும்பகோணம், ஏப். 21 –
கும்பகோணம் அருகே சோழபுரம் ராஜாங்கநல்லூர் மேலத்தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் கபிலன் (15) இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை 8.20 மணிக்கு பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் செல்லும் தனியார் பேருந்தில் பள்ளிக்கு செல்வதற்காக சோழபுரம் அருகே அந்த பஸ்சில் ஏறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கும்பகோணம் அருகே நத்தம் பகுதியில் பேருந்து சென்றுக் கொண்டிருந்த போது எதிரே வந்த வாகனத்தை பார்த்து டிரைவர் பஸ்சை நிறுத்திய போது படிக்கட்டில் நின்று பயணம் செய்த மாணவன் கபிலன் எதிர்பாராத விதமாக பஸ்சில் இருந்து கீழே தவறி விழுந்துள்ளார். இதனைப் பார்த்த சக பயணிகள் உடனே மாணவனை முதலுதவி சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து மருத்துவர் ஆலோசனைப்படி மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரிக்கு சிறுவன் கபிலன் அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை நடைப்பெற்று வருகிறது. இவ்விபத்து குறித்து கும்பகோணம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




















