கும்பகோணம், அக். 22 –
தெரு வியாபாரிகள் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தவும், சட்டத்துக்கு புறம்பாக, தெரு வியாபாரிகளை காவல்துறையினர் அச்சுறுத்தி, பொருட்களை சேதப்படுத்தி அப்புறப்படுத்துவதை தடுக்க கோரியும் தெரு வியாபாரிகள் சங்கத்தினர் இன்று கும்பகோணம் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து தெரு வியாபாரிகளுக்கும், குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயித்து வியாபார சான்று மற்றும் ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை வழங்க வேண்டும், வணிக குழு கூட்டத்தை சட்டப்படி குறைந்தபட்சம் 3 மாதத்திற்கு ஒரு முறை நடத்திடவும், இவர்களுக்கு வங்கிக்கடன் கிடைக்கவும், வீடு அற்ற வியாபாரிகளுக்கு இலவச வீட்டுமனை வழங்கக்கோரியும், இன்று கும்பகோணம் மாநகராட்சி அலுவலகம் முன்பு, தரைக்கடை தெரு வியாபாரிகள் சங்கத்தினர் ஏ.ஐ.டி.யு.சி. மாநில குழு உறுப்பினர் ஆர் மதியழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சட்ட ஆலோசகர் மு.அ. பாரதி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.