திருவண்ணாமலை பிப்.11-
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் கீரனூர் கிராமத்தில் ரூ.9.77 இலட்சம் மதிப்பீட்டில் (2021-22) பெரிய ஏரியின் நீர்வரத்து வாய்க்காலில் உறிஞ்சிக்குட்டை அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், வேளானந்தல் கிராமத்தில் ரூ.3.63 இலட்சம் மதிப்பீட்டில் (2019-20) சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், கோணலூர் கிராமத்தில் ரூ.2.87 இலட்சம் மதிப்பீட்டில் (2021-22) மேல்நிலைப்பள்ளியில் மழைநீர் சேகரிப்பு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், நாடழகானந்தல் ஊராட்சி ஒன்றியம், நா.கருங்கல்பட்டு கிராமத்தில் ரூ.3.60 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியினையும், ராஜாந்தாங்கல் கிராமத்தில் ரூ.9.80 இலட்சம் மதிப்பீட்டில் (2021-22) மேலதாங்கல் ஏரி கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும் மற்றும் ஆவூர் கிராமத்தில் ரூ.7.65 இலட்சம் மதிப்பீட்டில் (2021-22) கல்லறை மேட்டுத்தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்குமாறு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், ராஜந்தாங்கல் ஊராட்சி ஒன்றியம், இலுப்பதாங்கல் கிராமத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் (2019-20) கீழ் ரூ.1.70 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வீடு கட்டும் பணியினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக, கோணலூர் ஊராட்சிக்குட்பட்ட அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவினை உண்டு தரத்தினை ஆய்வு செய்தார். மேலும், அங்கன்வாடி மையத்தில் மின் விளக்கு மற்றும் மின்விசிறி இயங்காத நிலையில் இருந்ததை கண்டு, அதனை உடனடியாக பழுதுநீக்கம் செய்திட ஊராட்சி செயலருக்கு அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து கோணலூர் கூட்டுறவு நியாயவிலை கடையில் பொருட்கள் இருப்பு மற்றும் விநியோகம் செய்யப்பட்டுள்ள விவரம் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விற்பனையாளரிடம் கேட்டறிந்தார். மேலும், பொருட்கள் முறையாக விநியோகம் செய்யப்படுகிறதா என்பதை பொதுமக்களிடம் வினாவினார். மேலும், நாடழகானந்தல் ஊராட்சி ஒன்றியம், நா.கருங்கல்பட்டு கிராமத்தில ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றினை நட்டு வைத்தார்.
இந்த ஆய்வின்போது, கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல், ஆணையாளர் ஆ.சம்பத், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) பரமேஸ்வரன், வட்டாட்சியர் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
























