திருவாரூர், டிச. 01 –
திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் சேந்தமங்கலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது கார் மோதிய சம்பவம், நெஞ்சைப் பதபதைக்கும் வைக்கும் வகையில் உள்ள சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூரை அடுத்த வண்டாம்பாளை பகுதியை சேர்ந்த 67 வயதுடைய கேசவன் என்பவர் அருகில் உள்ள சேந்தமங்கலம் என்ற பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனது கடையில் இருந்து அருகில் உள்ள பேக்கரி ஒன்றுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு தனது கடைக்கு திரும்பும் போது, திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற கார் ஒன்று கேசவன் சென்ற இருசக்கர வாகனத்தின் பின்புறம் எதிர்பாராத விதமாக மோதியது.
இவ்விபத்தில் கேசவன் கீழே விழுந்தபோதிலும் எவ்வித காயமும் இன்றி உயிர்தப்பினார். தற்போது கேசவன் நல்ல உடல்நிலையோடு வழக்கமாக தனது பணியினை தனது உணவகத்தில் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடந்த இந்த பரபரப்பு சிசிடிவி காட்சியை தனது கடைக்கு உணவு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களிடம் கேசவன் காண்பித்து தான் உயிர் பிழைத்த சம்பவத்தை நினைவு கூர்ந்து வருகிறார்.






















