புதுச்சேரி, பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரி, சர்வதேச நகரமான ஆரோவில் உதய தினத்தை முன்னிட்டு இன்று புதுச்சேரியில் உள்ள பாரத் நிவாஸ் கலையரங்கத்தில் நடைபெறும் கட்டுரைப் போட்டி விருது வழங்கும் விழா மற்றும் சமுதாய ஒருங்கிணைப்பாளர்களுடன் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் நடைப்பெற்ற சிறப்பு தரிசனத்தில் பங்கேற்றார். அதனை முன்னிட்டு பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
நான்கு வருடத்திற்கு ஒருமுறை வரும் ஆரோவில் உதய தினமான பிப்ரவரி 29ஆம் தேதியான இன்று அன்னையின் கோல்டன் நாளாக அனுசரிக்கப்படுவதால் அரவிந்தர் மற்றும் அன்னையின் நினைவிடம் கோல்டன் கலரில் அலங்கரிக்கப் பட்டு நினைவிடத்தில் சிறப்பு தரிசனம் நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற ஆளுநர் ரவி சிறப்பு தரிசனம் செய்தார்.
தமிழக ஆளுநர் வருகையொட்டி ஆசிரமத்திற்கு வருகை தந்த பல்வேறு மாநிலத்தைச் சார்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. அதிகளவில் கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை போலீசார் அப்புறப்படுத்தப் பட்டனர். மேலும் அங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
தமிழக ஆளுநர் ரவி திடீர் வருகையால் அரவிந்தர் ஆசிரம வளாகமே சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. சுமார் அரை மணி நேரம் அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்ற பிறகே பொதுமக்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட்டது.