குடவாசல், மே. 11 –

கடந்த அதிமுக ஆட்சியில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட குடவாசல் பேருந்து நிலையம் புதிய அரசு அமைந்து ஓராண்டாகியும் இன்னும் செயல்பாட்டிற்கு வராமல் சீரழிந்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்தை முழுவதும்  பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

திருவாரூர் மாவட்டம், குடவாசலில் கடந்த அதிமுக ஆட்சியின் போது டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு குடவாசல்  பேருந்து நிலையம் ரூபாய் 1.90 லட்சம் மதிப்பீட்டில் நவீன படுத்தப்பட்டு திறக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த பஸ் நிலையத்தில் 8 வணிக வளாகங்கள் உள்ளது. இந்த வளாகங்கள் யாவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும் இந்த பேருந்து நிலையத்தில் ஆட்டோ, வேன் போன்ற  வாகனங்களும் தனியார் வாகனங்கள்  நிறுத்தும் இடமாக திகழ்ந்து வருவதால். இதனால் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வருவதற்கும் மற்றும் பொதுமக்கள் பேருந்து நிலையத்தில் நிற்பதற்கும் இடையூறாக உள்ளது. சில பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வராமலேயே செல்கின்றது.

மேலும், பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையம் மற்றும் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையும் பூட்டப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்திலுள்ள பாலூட்டும் தாய்மார்கள் அறையும் சுகாதாரமின்றி  பயன் படுத்தப் படாமல் உள்ளது  குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்தப் பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக வரவேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

 

பேட்டிகள்:

  1. அசோகன், – மூலங்குடி.
  2. ராஜி, குடவாசல்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here