கும்பகோணம், மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் ஒவ்வொரு ஆண்டும், மாசி மாதம் வரும் சிவராத்திரியை மகா சிவராத்திரியாக சிவாலயங்களில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கமாகும். அதுபோல இவ்வாண்டும், அவ்விழாவினை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களிலும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அதன்படி கும்பகோணம் மாநகரில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றானதும், மகாமக விழா தொடர்புடைய 12 சிவாலயங்களில் ஒன்றான நாகேஸ்வரன் கீழ வீதியில் அமைந்துள்ள காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரசுவாமி திருக்கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, விடிய விடிய மூலவர் ஏகாம்பரேஸ்வர சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியப்பொடி, மாப்பொடி, மஞ்சள் பொடி, தேன், பால், பஞ்சாமிர்தம், தயிர், சந்தனம் முதலிய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் தொடர்ந்து நடைபெற்றது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.