கும்பகோணம், ஜூன். 20 –
கும்பகோணத்தில் மாத்தி ரயில்வே கேட் பகுதியில், பெங்களுர் ஐடி துறையில் பணியாற்றும் பட்டதாரி இளைஞர் கோபிநாத் (28) ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது, எதிர்பாராதவிதமாக விரைவு ரயில் மோதியதில் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கும்பகோணம் அருகே அண்ணலக்ரஹாரம் மாத்திகேட் அருகேயுள்ள வெள்ளாளர் தெருவில் வசிக்கும் ராஜகோபால் என்பவரது மகன் கோபிநாத் (28) பொறியியல் பட்டதாரியான இவர் பெங்களுரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டில் இருந்தபடியே பணி செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை, மாத்தி ரயில்வே கேட் அருகே, தண்டவாளத்தை கடக்கும் போது, ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற விரைவு ரயில் எதிர்பாராவிதமாக மோதியதில், கோபிநாத் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த கும்பகோணம் இருப்பு பாதை ரயில்வே காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று கோபிநாத் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து உடற்கூறு ஆய்விற்காக, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பட்டதாரி இளைஞர் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியான சம்பவம் இன்று மாத்தி கேட் பகுதியில் பெரும் சோகத்தினையும், அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.






















