கும்பகோணம், ஜூன். 03 –
தஞ்சையில் இருந்து கும்பகோணம் வழியாக மணல்மேடு செல்லும் தனியார் பேருந்து நேற்று மாலை கும்பகோணம் மௌனசாமி மடம் வழியாக அதிவேகத்தில் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ஜல்லி சீனிவாசன் என்பவர் வீட்டிலிருந்து தனது இருசக்கர வாகனத்தை இறக்கிய போது, தஞ்சையில் இருந்து வந்த தனியார் பேருந்து தனக்கு முன்பாக சென்ற மினி பேருந்தை முந்தி செல்வதற்கு முயன்றுள்ளது. இந்நிலையில் இரண்டு சக்கர வாகனத்தில் இடிப்பது போல் சென்று பிரேக் அடித்து பேருந்தை நிறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜல்லி சீனுவாசன் அவரது மகன் அகின் மற்றும் கார்த்திக் ஆகியோர் பேருந்தின் பின் பக்கம் தட்டியுள்ளனர்.
இதனை தொடர்ந்து நடத்துனர் முருகன் ஓட்டுநர் சரத்குமார் இருவரும் பேருந்தை தட்டியவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது அகின் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை அடித்து உடைந்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது . இதனால் அப்பகுதி பரபரப்பானது இந்த சம்பவத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இச்சம்பவத்தால் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு லேசான காயம் ஏற்பட்டதால் கும்பகோணம் அரசு மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து கிழக்கு காவல் நிலையத்தார் வழக்கு பதிவு செய்து பேருந்து கண்ணாடி உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட அகின் மற்றும் அவரது நண்பர் கார்த்திக் இருவரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அகின் (17) மற்றும் கார்த்திக் (17) இருவரும் 17 வயது உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தனியார் பேருந்து மற்றும் மினி பேருந்துகள் அதிவேகமாக இயக்கப்படுவதால் விபத்துக்கள் அதிகமாக நேரிடுவதால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பேருந்து அதிவேகமாக இயக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.