திருவாரூர், ஏப். 17 –
திருவாரூர் மாவட்டம் புலிவலம் அருகே திரு.வி.க. நகரை சேர்ந்த சையது உசேன் என்பவரது மனைவி ரெஜினா பேகம் (வயது 34). இவரது கணவர் இறந்து விட்ட நிலையில், ரெஜினா பேகம் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் திருவாரூரைச் சேர்ந்த சையது உசேனின் நண்பரான செல்வகணபதிக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒருஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
மேலும், இந்நிலையில் நண்பரின் குடும்பம் என்ற அடிப்படையில் ரெஜினா பேகத்துக்கு அனைத்து உதவிகளையும் செல்வகணபதி செய்து வந்த தாகவும், மேலும் அவர் ரெஜினாபேகத்தை மறுதிருமணம் செய்து கொள்ளத் தனக்கு விருப்பம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கு ரெஜினாபேகத்தின் உறவினர்கள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இச்சூழ்நிலையில் ரெஜினாபேகம் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தனது குழந்தைகளுடன் காரைக்காலில் உள்ள சகோதரி வீட்டிற்கு சென்று வசித்து வருவதாகவும், மேலும் அப்போது செல்வகணபதியின் செல்போன் அழைப்புகளை எடுக்காமல் இருந்து வந்ததாகவும் தகவல் தெரிய வருகிறது. அதனால் செல்வகணபதி மனவேதனையுடன் இருந்து வந்ததாகவும் தெரிய வருகிறது.
இதனால் விரக்தி அடைந்த செல்வகணபதி கடந்த வியாழக்கிழமையன்று இரவு திரு.வி.க. நகரில் உள்ள ரெஜினாபேகத்தின் வீட்டு வாசலில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
மேலும் இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவாரூர் தாலுகா போலீசார் செல்வகணபதியின் உடலை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து அக்காவல் நிலையப் போலீசார் சந்தேக மரணம் என்றவாறு வழக்குப்பதிவு செய்து, இம்மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





















