செய்தி சேகரிப்பு இரமேஷ்
கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் பந்தநல்லூர் அருகே உள்ள கோவில் ராமா நல்லூர் கிராமத்தில் நேற்றிரவு மர்ம பொருளை கடித்த தெரு நாயின் வாய் சிதறி பலியானது. வெடித்து சிதறிய துகள்களை சேகரித்து போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கும்பகோணம், செப். 7 –
பந்தநல்லூர் அருகே உள்ள கோவில் ராமா நல்லூர் குடியான தெருவில் அருள் என்பவர் வசித்து வருகிறார். அவரின் வீட்டு அருகே நேற்று இரவு பிளாஸ்டிக் கவரில் சுற்றி இருந்த மர்ம பொருளை அப்பகுதியில் சுற்றி திரியும் தெரு நாய் இழுத்து வந்து கடித்துள்ளது. அப்போது அந்தப் பையில் இருந்த மர்மப்பொருள் வெடித்ததில் நாயின் வாய் சிதறி உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து பந்தநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு வந்த பந்தநல்லூர் காவல் துறையினர் நாயின் உடலை கைப்பற்றியும், வெடித்து சிதறிய வெடி மருந்தின் துகள்களையும் சேகரித்து புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் பற்றி அவ்வூர் மக்கள் கூறுகையில் அப்பகுதியில் இரவு நேரங்களில் நரிகளின் தொல்லை அதிகம் இருக்கும் என்பதால் நரியினை கொல்ல வெடி பொருட்கள் ஏதும் வைத்திருக்கலாம் என்றும், நரிக்கு வைத்த வெடியை கடித்ததால் நாய் உயிரிழந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் கோவில் ராமநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.