வினாயகர் சதுர்த்தி அன்று ஆளுயர சிலைகளை பொதுயிடங்களில் வைத்து வழிபடவும், குழுவாக சேர்ந்து ஊர்வலமாக சிலைகளை எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்க தமிழ்நாடு அரசு தடை விதித்திருந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பல இடங்களில் மாவட்ட நிர்வாகம் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில் வினாயகர் சதுர்தியை முன்னிட்டு வினாயகர் சிலைகளை செய்து விற்பனைக்கு வைத்திருந்த மூன்று கிடங்குகளுக்கு சீல் வைத்து வட்டாட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
திருவண்ணாமலை, செப்.7-
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் விநாயகர் சிலைகள் செய்து விற்பனைக்கு வைத்திருந்த 3 குடோன்களுக்கு தாசில்தார் குமாரவேலு சீல் வைத்தார். விநாயகர் சதுர்த்தி விழா நாடு வரும் 10ந் தேதி கொண்டாப்படுகிறது. தற்போது கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அரசு தடை விதித்துள்ளது.
அதனடிப்படையில் வெம்பாக்கம் தாசில்தார் குமாரவேலு மற்றும் வருவாய்த்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் ஏற்கனவே பொது இடங்களில் வைக்கக்கூடிய சிலைகள் செய்து வைத்திருந்த குடோன்களை ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் வெம்பாக்கம் வட்டம் அப்துல்லாபுரம் கிராமத்தில் அண்ணாமலை என்பவருக்கு சொந்தமான இடத்தில் 35 விநாயகர் சிலைகள் செய்து வைத்திருப்பதை கண்டறிந்து அந்த குடோனுக்கு தாசில்தார் குமாரவேலு தலைமையில் அதிகாரிகள் சீல்வைத்தனர்.
இதே போல் பிரம்மதேசம் கிராமத்தில் ஏழுமலை என்பவருக்கு சொந்தமான இடத்தில் உள்ள 2 குடோன்களில் 10 அடி சிலைகள் 15ம், 4 அடி சிலைகள் 25ம், இருப்பதை கண்டறிந்து இரு குடோன்களுக்கும் பிரம்மதேசம் காவல்துறையினர் முன்னிலையில் தாசில்தார் குமாரவேலு சீல் வைத்தார்.