கும்பகோணம், ஜன. 22 –
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் வீர மரணம் அடைந்த முன்னாள் இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் மார்பளவு ஐம்பொன் சிலை ஒரு சிற்பசாலையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த சிலையை டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி தலைமையில் சமர்ப்பிக்க இருப்பதாக சிலையை உருவாக்கி வரும் முன்னாள் ராணுவத்தினர் தெரிவித்தனர்.
கும்பகோணத்தில் இந்தியாவின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் கடந்த ஆண்டு (2021) டிசம்பர் மாதம் 8-ந் தேதி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருக்கும் வெலிங்கடன் ராணுவ பயிற்சிபள்ளியில் பயிற்சி பெற்றுவரும் அலுவலர்களிடையே உரை நிகழ்த்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஹெலிகாப்டரில் சென்ற போது அவர் சென்ற ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுல்லிக்கா ராவத் மற்றும் அதில் பயணம் செய்த 11 ராணுவவீரர்கள் உயிரிழந்தனர். மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு வெல்லிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண் சிங்கும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், பாதுகாப்புத்துறை அமைச்சர், மற்றும் அனைத்து மாநில முதல் அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்தனர். மேலும் இந்தியா முழுவதும் பிபின் ராவத் மறைவிற்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த பிபின் ராவத்தின் வீரத்தை போற்றும் வகையில் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் ஷைன் இந்தியன் சோல்ஜர்ஸ் சோசியல் வெல்பேர் பவுண்டேஷன் சார்பில் 120 கிலோ எடையில் பிபின் ராவத் மார்பளவு ஐம்பொன் சிலை தயாரித்து அதனை டெல்லியில் உள்ள ராணுவ போர் நினைவு சின்னத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ராமசாமி கோவில் அருகே உள்ள ஒரு சிற்பக் கூடத்தில் ஐம்பொன்னினால் ஆனா பிபின் ராவத் சிலை தயார் செய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதன் முதற்கட்டமாக களிமண்ணில் அவரது உருவம் தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈய்ம் ஆகிய உலோகங்கள் அடங்கிய ஐம்பொன்களை காய்ச்சி செய்து வைக்கப்பட்டுள்ள பிபின்ராவத் களிமண் சிலை மீது ஊற்றி முழு உருவம் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து முன்னாள் ராணுவ கேப்டன் பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறுகையில்,
ஹெலிகாப்டர் விபத்தில் வீரமரணம் அடைந்த முப்படை தளபதி பிபின் ராவத்திற்கு மரியாதை செய்யும் விதமாக முன்னாள் ராணுவ வீரர்கள் அனைவரும் இணைந்து அவருக்கு ஐம்பொன் சிலை செய்து உலகத்தின் மையப் பகுதியான சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருந்து புறப்பட்டு 8 மாநிலங்கள் வழியாக அவரது சிலையை கொண்டு சென்று மக்களுக்கும், இளைஞர்களுக்கும் நாட்டுபற்றை உருவாக்கும் விதமாக யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து டெல்லிக்கு சென்று இந்தியா கேட் போர் நினைவுச் சின்னம் அருகில் அருகில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்த சிலையை சமர்ப்பிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.



















