மீஞ்சூர், ஜூலை. 31 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்டதும், நாலூர் ஊராட்சி பகுதியில் அண்ணாநகர், ஜெயராம் புரம், கம்மாவார்பாளையம், ஆகிய ஊர்களில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சார்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்பகுதி மக்கள் நாலூர் ஏரிக்கரை கம்மாவார்பாளையம் சாலைகளை பொக்குவரத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். இச் சாலையில் பல்வேறு கம்பெனிகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் இச்சாலை முழுவதும் பழுதடைந்து, குண்டும் குழியுமாக இருக்கிறது. அதனால் அப்பள்ளங்களில் மழைநீர் தேங்கி பொது மக்கள் போக்குவரத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும், மேலும் இச்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உடல் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் அதனால் பள்ளி மாணவர்கள், மற்றும் பல்வேறு இடங்களுக்கு பணிக்கு செல்பவர்கள், பொதுமக்கள் என அனைவரும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கும் போது, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இச்சாலை போடப் பட்டதாகவும், அதனால் சிதிலமடைந்துக் கிடக்கும் அச்சாலையினை சீரமைக்க வேண்டுமென பல தடவைகளுக்கு மேலாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்ததாகவும், அப்புகார் மனு மீது எவ்வித நடவடிக்கையையும் அவர்கள் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தொடர்ந்து தங்கள் கோரிக்கை மனுவை புறந்தள்ளி வரும், உள்ளூர், துறைச்சார்ந்த மற்றும் மாவட்ட நிர்வாகம் என அனைத்தையும் கண்டிக்கும் வகையில், நாலூர் அண்ணா நகர், ஜெயராம்புரம், பகுதி மக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் நாலூர் ஏரிக்கரை கம்மாவார் பாளையம் சாலை அண்ணா நகரில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்,
இத்தகவலறிந்து அங்கு வந்த மீஞ்சூர் காவல்நிலைய ஆய்வாளர் காளிராஜ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி இப்பிரச்சினைக் குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததின் பேரில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அனைவரும் போராட்டத்தை கை விட்டு அப்பகுதியில் இருந்து கலைந்து சென்றனர். இச்சாலை மறியல் போராட்டத்தினால் அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.






















