காஞ்சிபுரம், ஜன. 22 –
நேற்று பல்வேறு குற்றவழக்குகளில் சேடப்பட்டு வந்த பிரபல ரவுடி தியாகு டெல்லியில் காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் அழைத்து வரப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டப் பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவருக்கு பிப்ரவரி 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாவட்ட நீதிபதி சந்திரன் உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, வேலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
காஞ்சிபுரம் பொய்யாகுளம் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் எனும் ரவுடி தியாகு, கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், கட்டப் பஞ்சாயத்து, பணம் பறித்தல், உள்ளிட்ட 63 வழக்குகளில் சம்பந்தப்பட்டு சிறையில் இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் சிறையிலிருந்து ஜாமீனில் வெளி வந்த ரவுடி தலைமறைவாகி விட்டார்.
இந்நிலையில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த நிலையில் நீதிமன்றம் ரவுடி தியாகுவை பிடிக்க பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையிலான தனிப்படை போலீசார் ரவுடி தியாகுவை தீவிரமாக தேடி வந்தனர்.
ரவுடி தியாகு டெல்லியில் தலைமறைவாக உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் டெல்லிக்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் டெல்லியில் இருந்து அரியானாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற ரவுடி தியாகுவை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
டெல்லியில் கைது செய்யப்பட்ட ரவுடி தியாகு நேற்று நள்ளிரவு விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு, பின்னர் காஞ்சிபுரத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் இன்று தியாகுவிற்கு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை, மற்றும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதைத் தொடர்ந்து விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் வைத்து தனிப்படை போலீசார் ரவுடி தியாகுவிடம் 6 மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் காஞ்சிபுரத்தில் உள்ள மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் மாவட்ட நீதிபதி சந்திரன் முன்னிலையில் ரவுடி தியாகுவை போலீசார் ஆஜர் படுத்தினர்.
இதை தொடர்ந்து பிப்ரவரி 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சந்திரன் உத்தரவிட்டதை தொடர்ந்து ரவுடி தியாகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.