காஞ்சிபுரம், ஜன. 22 –
காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தை பின்புறம் உள்ள மாநகராட்சிக்கு உட்பட்ட 24-வது வார்டு தும்பவனம் அருணாசலம் தெரு பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தெரு முழுவதும் வெளியேறியதால் குடியிருப்பு வாசிகள் திடீர் சாலை மறியலில் நேற்று ஈடுப்பட்டனர்..
மேலும் ராஜாஜி காய்கறிச் சந்தையில் இருந்து வெளியேறும் கழிவு நீரையும் மோட்டார் வைத்து இறைத்து தெருவில் விடப்பட்டுள்ளது. நீண்ட காலமாக தொடர்ந்து இப் பிரச்சினை நீடித்து வருவதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்..
அப்பகுதி மக்களின் சாலை மறியல் போராட்டத்தை அறிந்து காவல்துறையினரும், மாநகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்பு, கழிவு நீர் உறிஞ்சு வாகனங்கள் கொண்டு வரப்பட்டு கழிவு நீரை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். கழிவுநீரை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டதை தொடர்ந்து சமாதானம் அடைந்து சாலை மறியலை கைவிட்டு பொது மக்கள் கலைந்து சென்றனர்.
மேலும் கழிவுநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.




















