சென்னை, மார்ச். 12 –

பெண்கள் பொருளாதாரத்தில் அதிகாரம் பெறுவது மிகவும் முக்கியம் என்று தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை சாஸ்திரி பவன் வளாகத்தில் பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் நேற்று (மார்ச் 11) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. “தடைகளைத் தகர்ப்போம்” என்ற மையப் பொருளுடன் நடைப்பெற்ற இந்த விழாவில் தலைமை விருந்தினராகப் பங்கேற்றுப் பேசிய  தமிழிசை சௌந்தரராஜன், பெண்கள் தங்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களை வெளிப்படுத்த இயலாத நிலை உள்ளது. இதற்கு காரணம் அவர்கள் மற்றவர்களை சார்ந்திருப்பதுதான். எனவே பெண்கள் பொருளாதாரத்தில் அதிகாரம் பெறுவது மிகவும் முக்கியமானதாகும் என்றார்.

இதனைக் கருத்தில் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான  மத்திய அரசு முத்ரா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் பெண்கள் தொழில் தொடங்க முன்னுரிமை அளித்துள்ளது. உஜ்வாலா திட்டத்தில்  சமையல் எரிவாயு இணைப்பையும், பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தில் வீட்டின் உரிமையையும் பெண்களுக்கு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது என்று அவர் கூறினார்.

தடைகளைத் தகர்ப்பது என்பது தமக்கு மிகவும் பிடித்தமான விஷயம் என்று கூறிய அவர்,  அனைத்துப் பெண்களும் எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றார். ஓடுகின்றவர்களை எவரும் விரட்டலாம், எதிர்த்து நின்றால் அவர்கள் ஓடிவிடுவார்கள் என்பதற்கு தம்மை நாய் ஒன்று விரட்டிய சம்பவம் குறித்து சுவாமி விவேகானந்தர்  எழுதியிருப்பதை ஆளுநர் எடுத்துரைத்தார்.

பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு அஞ்சி உயிரை மாய்த்துக் கொள்வது தமக்கு உடன்பாடு இல்லாதது என்பதையும் அவர் அழுத்தமாக பதிவு செய்தார். வாழ்வதற்கே நாம் பிறந்திருக்கிறோம் என்பதை மனதில் கொண்டு, வருவதை எதிர்கொள்ளும் மனத்துணிவை அனைவரும்  பெற வேண்டும் என்று தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தினார்.

உடைகள் உடுப்பதில் சுதந்திரம் தேவை என்பது தமக்கு உடன்பாடான கருத்து தான் என்றாலும், உடை உடுத்தும் சுதந்திரம்  பெண்களுக்கே எதிரானதாக மாறிவிடாமல் பார்த்து கொள்வதும் நமது பண்பாட்டுக்கு ஏற்ப உடைகள் உடுத்துவதும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச மகளிர் தின விழாவின் மையப் பொருளையொட்டி பார்வையாளர்களுடன் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துரையாடினார்.

இந்த விழாவில் பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் எம்.அண்ணாதுரை வரவேற்புரை ஆற்றினார். இயக்குனர் குருபாபு பலராமன் நன்றி கூறினார்.

பின்னர் நடைபெற்ற கருத்தரங்கில் காவல்துறை துணை ஆணையர் ஷியாமளாதேவி, திரைப்பட தயாரிப்பாளர் இயக்குனர் குட்டிபத்மினி, எழுத்தாளர் இயக்குனர் கீதா இளங்கோவன் ஆகியோர் உரையாற்றினர்.

இதைத் தொடர்ந்து பாகுபாடுகளை தகர்ப்போம் என்ற பொருளில் கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்ற நாடக மற்றும் சைகை நடிப்பு போட்டிகள் நடைபெற்றன. இதற்கு நடிகர் சந்தோஷ் பிரதாப், அகில இந்திய வானொலியின் நிகழ்ச்சிப் பிரிவு தலைவர் ப்ளோரா ராணி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர். நிறைவு விழாவில் வருமான வரித்துறையின் முதன்மை தலைமை ஆணையர் கீதா ரவிச்சந்திரன் தலைமை விருந்தினராக பங்கேற்றார்.  இந்த நிகழ்வில் மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இயக்குனர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here