பொன்னேரி, ஆக. 15 –
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள மெதூர் கிராமத்தில் அருள்பாலிக்கும் எல்லையம்மன் ஆலயத்தின் தீ மிதி திருவிழா கடந்த 21 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடைப்பெற்றது. இதில் பக்தர்கள் அம்மனை வேண்டி காப்பு கட்டி விரதம் இருந்தனர். இவ்விழாவினை முன்னிட்டு கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வந்த உற்சவங்களில் அம்மன் நாள்தோறும் வாண வேடிக்கைகளுடன் வீதி உலா வந்து பல்வேறு வடிவங்களில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதனைத்தொடர்ந்து பத்தாவது நாளான இன்று எல்லையம்மனும், கொம்மாத்தம்மனும் நேருக்கு நேர் சந்தித்து பின், அக்னி குண்டம் அருகே வந்தடைந்தனர். அங்கு 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள். 21 ஆண்டுகளுக்கு பின் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைப்பெற்ற இந்த திருவிழாவை காண பொன்னேரி, திருப்பாலைவனம், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் இவ்விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.