கும்பகோணம், அக். 25 –
கும்பகோணம் அருகே திப்பிராஜபுரத்தில் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் சிறப்பு தன்னிறைவு திட்டத்தின்கீழ் ரூ.45 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் தலைமை வகித்தார். அரசு தலைமை கொறடா கோவி செழியன், மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம், எம்எல்ஏக்கள் கும்பகோணம் அன்பழகன், திருவயைாறு சந்திரசேரகன், பாபநாசம் ஜவாஹிருல்லா, மாநில பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு தலைவர் காயத்திரி வரவேற்றார். சிட்டியூனியன் வங்கி தலைமை மேலாண் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் காமகோடி, நாராயணி நிதி லிமிடெட் நிர்வாக இயக்குனர் கார்த்திக்கேயன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்..
அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், திப்பிராஜபுரம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைத்திட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்கு பின் பகுதியில் உள்ள தேவையற்ற மரங்களை அகற்றவும், நல்ல மரங்களை வேறு இடத்தில் பெயர்த்து வைப்பது குறித்து துறை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்து ரூ. 50 லட்சம் மதிப்பில் விளையாட்டு மைதானம் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், திப்பிராஜபுரம் தொடக்கப்பள்ளிக்கு தேவையான 3 ஆசிரியர் பணியிடம் விரைவில் ஏற்படுத்தப்படும். அதே போல் அரசு உயர்நிலைப்பள்ளியை தரம் உயர்த்திடவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து பொது மக்களுக்கு சிகிச்சை அளித்த நிலையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த தனியார் மருத்துவமனை டாக்டர்கள் விஷ்ணுபிரியா, வேலாயுதம், சின்னசாமி சேது ஆகியோரின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்ட தலா ரூ. 25 லட்சத்திற்கான காசோலையை அவர்களது குடும்பத்தாரிடம் அமைச்சர்கள் மகேஷ்பொய்யாமொழி, மெய்யநாதன் ஆகியோர் வழங்கினர்.
இதில் கும்பகோணம் ஒன்றியக்குழு துணைத் தலைவர் கணேசன், முன்னாள் நகராட்சி தலைவர் தமிழழகன், ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார், பாஸ்கர், மாவட்ட கவுன்சிலர் ராஜா, ஒன்றிய கவுன்சிலர் பாண்டியன், ஊராட்சி தலைவர் முருகையன், துணைத் தலைவர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கொருக்கை ஊராட்சியில் புதிய வழித்தடத்தில் ஏ72 என்ற டவுன் பஸ் கும்பகோணம், கொற்கை, ஆர்டிஓ அலுவலகம், பட்டீஸ்வரம் கோவிந்தகுடி பாபநாசம் மார்க்கத்தில் இயங்கிடும் வகையில் பஸ் சேவை தொடக்க விழா நடந்தது. தொடர்ந்து பம்பப்படையூர் ஆரியப்படைவீடு ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி மானிய நிதிகுழு மானியத்தில் ரூ.49 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாய கூடம் மற்றும் எம்பி நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நுாலக கட்டடிடங்களை அமைச்சர்கள் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர்.