தஞ்சாவூர், மே. 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…
தஞ்சாவூரை ஆண்ட அச்சுதப்பநாயக்கர் ஆட்சி காலமான 16 ஆம் நுாற்றாண்டில், ஆந்திராவில் இருந்த வந்த அறிஞர்கள், கலைஞர்களுக்கு மெலட்டூரில் வீடு, நிலம் வழங்கப்பட்டது. இவர்களில் பாகவதலு என்கிற பாகவதர்கள் இணைந்து அரங்கேற்றிய கலைதான் பாகவத மேளா. மக்களிடையே பக்தியை வளர்ப்பதற்காக இந்தக் கலை உருவாக்கப்பட்டது.
மெலட்டூரை சுற்றியுள்ள சாலியமங்கலம், ஊத்துக்காடு, தேப்பெருமாநல்லுார் உள்ளிட்ட பல கிராமங்களில், லட்சுமி நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு ஆண்டுதோறும் பாகவத மேளா நடத்தப்பட்டு வந்தது. தற்போது மெலட்டூர், சாலியமங்கலம் கிராமத்தில் மட்டுமே இக்கலையானது இன்றும் தொடர்கிறது.
பிரகலாத சரித்திரம், ஹரிச்சந்திரா, மார்க்கண்டேயா, உஷா பரிணயம், ஸ்ரீகிருஷ்ண ஜனனம் கம்சவதம், ருக்மணி கல்யாணம், சீதா பரிணயம், துருவ சரித்திரம், ஹரிஹர லீலா விலாசம் ஹரிஹர புத்ரன் ஜனனம், சதி சாவித்திரி என 12 பாகவத மேளா நாடகங்களுக்கான கதை, வசனம் எழுதி மெலட்டூரில் வாழ்ந்த வெங்கட்ராம சாஸ்திரி இயக்கி நடத்தி வந்தார்.
தெலுங்கு மொழியில் நிகழ்த்தப்படும் நாடகங்கள் அனைத்தும் புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டது. மெலட்டூர், சாலியமங்கலத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் என எங்கு வசித்தாலும், அவர்கள் இந்த பாகவத மேளா விழா நாட்களில் சொந்த ஊருக்கு வந்து பங்கேற்பது வழக்கம்.
இதில் பெண்கள் காதபாத்திரங்களில், ஆண்களே பெண்கள் போல வேடமிட்டு நடிப்பார்கள். அதன்படி மெலட்டூரில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உள்ள ஸ்ரீ நல்லி கலையரங்கத்தில் மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய நாடக அறக்கட்டளை, மெலட்டூர் பாகவத மேளா நாட்டிய வித்யா சங்கம் ஆகியவை சார்பில் ஒவ்வொரு அண்டும் நடிக்கப்பட்டு வருகிறது.
நேற்று இரவு 11 மணிக்கு பாரம்பரிய முறைப்படி எண்ணெய் விளக்கு ஒளியில் தொடங்கிய ஸ்ரீ பிரகலாத சரித்திரம் என்கிற பாகவத மேளா நாட்டிய நாடகம் விடிய விடிய நடைபெற்றது.
தொடர்ந்து வரும் 24ம் தேதி ருக்மணி கல்யாணம், ஆஞ்சநேய உற்சவத்துடன் பாகவத மேளா நிறைவு பெறுகிறது.
இதில் பங்கேற்பவர்கள் விரதிமிருந்து தவமாக இருந்து நாட்டிய நாடகத்தில் நடிப்பார்கள். தெய்வீகம் ,செவ்வியல் இசை ,நாட்டிமரபுங்கள் நிறைந்த பாகவத மேளா பழமை மாறாமல் ஒவ்வொரு ஆண்டு பாரம்பரிய மெலட்டூரில் நடத்தப்பட்டு வருகிறது
பாகவத மேளா நாட்டிய கலைஞர்கள் கூறுகையில் கலை பண்பாட்டுக் துறை மற்றும் தமிழக அரசும் பாகவத மேளா நாட்டிய நாடகத்தை மக்களிடையே கொண்டு சோர்க்க வழிவகை செய்ய வேண்டும் ,இந்த நாடகத்தை அனைத்து மாவட்டங்களிலும் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






















