போர் கைதியாக பிடிபட்ட அபிநந்தனை விடுதலை செய்வோம் என்று கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்தார்.
அதன் பிறகு அவர் அபிநந்தனின் விடுதலை எப்படி நடைபெறும் என்பதை கேட்டு அறிந்தார். அபிநந்தன் பாதுகாப்பாக இந்தியாவுக்கு செல்ல வேண்டும் என்பதில் அவர் தீவிர கவனம் செலுத்தினார்.
பாகிஸ்தானியர்களிடம் சிக்கியதும் தாக்குதலுக்கு உள்ளான அபிநந்தன் பிறகு சுமூகமான முறையில் நடத்தப்பட்டார். வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அவருக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. இதற்கு இம்ரான் கானின் கண்டிப்பான உத்தரவுதான் காரணம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே அபிநந்தன் நேற்று மதியம் ராவல் பிண்டியில் இருந்து லாகூருக்கு அழைத்து வரப்பட்ட சிறிது நேரத்தில் பிரதமர் இம்ரான்கானும் லாகூருக்கு வந்து சேர்ந்தார். லாகூரில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தபடி அவர் அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் நடவடிக்கை பணிகளை கேட்டு அறிந்தார்.
அபிநந்தன் தொடர்பாக என்னென்ன செய்யப்பட்டுள்ளது என்பதையும் அவர் ஆய்வு செய்தார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதட்டத்தை முற்றிலுமாக தணிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இம்ரான்கான் லாகூர் வந்து தங்கியிருந்ததாக பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி உஸ்மான் பஸ்தர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “இரவு 9.30 மணிக்கு அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் வரை இம்ரான்கான் லாகூரில்தான் இருந்தார். இரவு 10.30 மணிக்குதான் அவர் இஸ்லாமாபாத்துக்கு புறப்பட்டு சென்றார்” என்றார்.
ஆனால் வாகாவுக்கு அழைத்து வரப்பட்ட பிறகு அபிநந்தனிடம் கட்டாயப்படுத்தி வீடியோவில் பேச வைத்த விவகாரம் இம்ரான் கானுக்கு எதிராக சர்ச்சையை உருவாக்கி உள்ளது.