அல்ஜியர்ஸ்:

அல்ஜீரியா நாட்டில் வரும் ஏப்ரல் 18ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. ஜனாதிபதி பதவிக்கு 5-வது முறையாக போட்டியிடப் போவதாக தற்போதைய ஜனாதிபதி அப்தலசீஸ் போதேபிலிகா கடந்த ஜனவரி 28ம் தேதி அறிவித்திருந்தார்.

ஆனால், 81 வயது நிரம்பிய ஜனாதிபதி அப்தலசீஸ் போதேபிலிகா, நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

நேற்று தலைநகர் அல்ஜியர்சில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு, ஜனாதிபதி பதவிக்கு போதேபிலிகா போட்டியிடுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராக அதிருப்தி பதாகைகளை தாங்கி முழக்கங்கள் எழுப்பினர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசி, போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.

ஜனாதிபதி மாளிகை உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. போலீஸ் ஹெலிகாப்டர்கள் தாழ்வாக பறந்து கண்காணிப்பில் ஈடுபட்டன. இந்த எதிர்ப்புக்கு மத்தியில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக போதேபிலிகா நாளை வேட்பு மனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here