லாகூர்:
இந்திய ராணுவ வீரர்கள் மீது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை குண்டு வீசி தாக்கியது. அதை பாகிஸ்தான் மறுத்தது.
ஆனால் இந்திய விமானப்படை குண்டுவீசி தாக்கியது உண்மை என ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் இளைய தம்பி மவுலானா அம்மார் ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்திய விமானப்படை குண்டு வீசி தாக்கிய மறுநாள் சமூக வலைதளங்களில் ஒரு ஆடியோ வைரலாக பரவியது. அது மவுலானா அம்மார் பெஷாவரில் மதகுருமார்கள் மத்தியில் பேசியது.
அதில், “நமது எதிரிகள் (இந்திய விமானப்படை) மலைகளை தாண்டி பாகிஸ்தானுக்குள் புகுந்து ‘மர்கஷ்’ (மதம் சம்பந்தப்பட்ட கல்வி பயிலும் கூடம்) மீது தாக்கி விட்டு சென்றுள்ளனர். அதற்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும்.
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பாதுகாப்பான இடம் மற்றும் தலைமை அலுவலகம் மீது இந்திய விமானப்படை குண்டு வீசி தாக்கவில்லை. மத சம்பந்தமாக மாணவர்கள் பயிலும் கல்விக் கூடத்தின் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் தாக்குதல் நடைபெற்ற முகாமில் இருந்து 30-க்கும் மேற்பட்ட உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் அப்புறப்படுத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இப்பணியில் மருத்துவ ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இத்தாக்குதலில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவு துறையின் முன்னாள் அதிகாரி கர்னல்சலீம் கொல்லப்பட்டார். மற்றொரு அதிகாரி கர்னல் ஷக்ரி காயம் அடைந்தார். பயிற்சி பெற்று வந்த பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.