திருவண்ணாமலை, செப் . 17 –

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் மற்றும் ஊழியர்களும் (17.09.2021) ஏற்றுக்கொண்டனர்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் 06.09.2021 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் எனப் போற்றப்படும் ஈ.வெ.ராமசாமி அவர்களின் அறிவுச் சுடரை போற்றும் விதமாக அவரது பிறந்த தினமான செப்டம்பர் 17-ஆம் நாளை ஆண்டுதோறும் “சமூக நீதி நாள்” ஆக கொண்டாடுவது என்று தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது என சட்டமன்ற விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார்கள்.

‘மனிதனுக்கு மனிதன் ஏற்றத் தாழ்வு இல்லை, ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம்’ இவை இரண்டும் தான் தந்தை பெரியாரின் அடிப்படைக் கொள்கைகள். சாதி ஒழிப்பு, பெண் அடிமைத்தனம் ஒழிப்பு ஆகிய இரண்டும் தான் அவரது இலக்குகளாக இருந்திருக்கின்றன. அவரது சுயமரியாதைச் சிந்தனையால், தமிழினம் சுயமரியாதைச் சிந்தனையைப் பெற்றது. அவர் உருவாக்கிய பகுத்தறிவின் கூர்மையால் தமிழனம் சிந்தனைத் தெளிவு பெற்றது. இன்று தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் சமூகநீதிக் கருத்துக்கள் விதைக்கப்பட்டுள்ளன என்றால், அதற்கு அவர் போட்ட அடித்தளமே காரணம். சாதிய ஏற்றத் தாழ்வுகள், தீண்டாமைக் கொடுமைகளை, மத வேறுபாடுகளை உதறித் தள்ளி, பெண்களைச் சமநிலையில் மதிக்கும் கொள்கையை உருவாக்கிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் 17-ஆம் நாள் அன்று ஆண்டுதோறும் தலைமைச் செயலகம் தொடங்கி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் “சமூக நீதி நாள்”  உறுதி எடுத்துக் கொள்ளும் விதமாக கீழ்கணடவாறு உறுதி மொழியினை அரசு ஆணையிட்டுள்ளது.

அதன்படி இன்று அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களும் உறுதி மொழியினை ஏற்றுக்கொண்டனர்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் –
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும்
எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்!

சுயமரியாதை ஆளுமைத் திறனும் – பகுத்தறிவுக்
கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்றுடைய
செயல்பாடுகள் அமையும்

சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய
கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக்
கொள்வேன்!

மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த
ஓட்டமாக அமையும்

சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம்
அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன் என அனைத்துத் துறையைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் சமூக நீதிநாள் உறுதிமொழியேற்றனர்.
 

இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் இரா. முத்துக்குமரசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.லோகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here