மீஞ்சூர், ஏப். 25 –
மீஞ்சூரில் அரசு ஆதிதிராவிட உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுடன் ஒழுக்கம் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் மீஞ்சூர் காவல் ஆய்வாளர் பங்கேற்று உரை நிகழ்த்தினார். மேலும் இந் நிகழ்ச்சியில் மாணவர்கள் அனைவரும் என்னால் என் பள்ளி பெருமையடையும் என உறுதிமொழியேற்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியில் இயங்கி வருகிறது அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இவர்களின் வாழ்வாதார நிலையைக் கருத்தில் கொண்டு நல்லொழுக்கத்தை மேம்படுத்த ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி பள்ளியின் வளாகத்திற்குள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் வேலு தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் பொறுப்பாளர்களும் மற்றும் சமூக ஆர்வலர் குருசாலமோன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மீஞ்சூர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் சிரஞ்சீவி கலந்து கொண்டு ஒழுக்கத்தைப் பற்றி பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
மாணவர்கள் அனைவரும் என்னால் எங்கள் பள்ளி பெருமை அடையும் என்று உறுதி ஏற்றுக்கொண்டனர். மேலும் தீய பழக்கங்களில் மாணவர்கள் சிக்கிவிடக் கூடாது எனவும் மாணவிகள் கவனத்துடன் பள்ளிக்கு வருகை தந்து பாதுகாப்பாக செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இதில் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மாணவர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.