டான்சில்க் புதிய தலைவர் மற்றும் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் மற்றும் மாவட்ட பிரதிநிதி சுகுமார் வாழ்த்தினர்.
காஞ்சிபுரம், டிச. 10 –
காஞ்சிபுரத்தை தலைமையகமாக கொண்டு மாநில பட்டு கூட்டுறவு உற்பத்தி இணையம் ( டான்சில்க்) தமிழகம் முழுவதும் உள்ள பட்டு கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த 21 உறுப்பினர்கள் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த முறை அதிமுகவை சேர்ந்த ஆர்.டி.சேகர் என்பவர் தலைவராக செயல்பட்டு வந்தார். கடந்த மாதம் பட்டு வளர்ச்சித் துறையின் இயக்குநர் அவர்களுக்கு நிர்வாக குழு தலைவர் மற்றும் நிர்வாக குழு துணைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர 15 பேர் கையெழுத்திட்டு மனு அளித்தனர்.
இதையடுத்து இவர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் புதிய தலைவர் மற்றும் துணைத் தேர்தல் தேர்ந்தெடுக்கும் தேர்தல் சிறு காவேரிப்பாக்கம் அருகே உள்ள பட்டு வளர்ச்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காலை 10 மணிக்கு வேட்புமனுத்தாக்கல் துவங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டு விவசாயிகள் மற்றும் பட்டு தொழில் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் மணிகண்டன் என்பவர் தலைவர் பதவிக்கும் மற்றும் திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கம் தலைவர் வைரவேல் துணைத் தலைவர் பதவிக்கும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வேறு எவரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யாததால் வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு போட்டியின்றி இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மணிகண்டன், துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வைரவேல் ஆகியோருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் படைப்பை மனோகரன் மற்றும் மாவட்ட பிரதிநிதி சுகுமார் ஆகியோர் பட்டாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.