சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொது தீட்சிதர்கள் சார்பில் கின்னஸ் சாதனைக்காக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று காலை முதலே தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் பல்வேறு மாநிலங்கள், மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்க மாணவ-மாணவிகள் மற்றும் கலைஞர்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தனர்.

பின்பு சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம், 4 வெளிப்புற பிரகாரங்களிலும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி காலை 8 மணிக்கு தொடங்கி 8.45 மணிவரை நடைபெற்றது. இதில் 7 ஆயிரத்து 195 நாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியை நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் முருகேசன் வாழ்த்தி பேசினார். கின்னஸ் உலக சாதனை பதிவு அதிகாரி இங்கிலாந்தை சேர்ந்த ரிஷிநாத் கலந்து கொண்டு உலக சாதனையில் இதனை பதிவு செய்தார்.

இதற்கு முன்பு சென்னை வேல்டெக் வளாகத்தில் 4 ஆயிரத்து 500 பேர் கலந்து கொண்ட நாட்டியாஞ்சலி நடத்தப்பட்டது. தற்போது அதனை முறியடித்து 7 ஆயிரத்து 195 நாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளனர்.

கின்னஸ் சாதனைக்காக நடத்தப்பட்ட இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர். இதையொட்டி போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here