ராமநாதபுரம், ஜூன்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் திருப்புல்லாணி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யகிரி பற்றாளராக இருக்க ஊராட்சி செயலாளர் வாணிஸ்ரீ தலைமையில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கிராம வளர்ச்சிக்குறித்தும், குடிநீர் தேவையை சமாளிக்க தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்தும், அடிப்படை வசதிகள் என்ன என்ன என்பது குறித்தும் மக்கள் விவாதித்தனர். மக்களின் கேள்விகளுக்கு மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உரிய விளக்கம் அளித்தார். கூட்டத்தில் ராமசந்திரன், சண்முகம், செந்தீஸ்வரன், சரவணபாண்டியன் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்ட மக்களும் மகளிர் குழுவினரும், அரசு துறை சார்ந்த அலுவலர்களும் பங்கேற்றனர். ஆனந்தம் நன்றி கூறினார்.
சேதுக்கரை ஊராட்சி:
திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் சேதுக்கரை ஊராட்சியில் மேலபுதுக்குடி, கீழபுதுக்குடி, பிச்சாவலசை, பஞ்சதாங்கி, சேதுக்கரை உள்ளிட்ட 8 கிராம மக்கள் திரளாக பங்கேற்ற கிராம சபை கூட்டத்தில் குடிநீர் தேவை குறித்தும் அதற்கு நிவர்த்தி செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய உதவியாளர் செல்வி பற்றாளராக பங்கேற்று மக்களின் கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளித்தார். ஊராட்சி செயலாளர் சாந்தி கிராம சபை கூட்ட ஏற்பாடுகளை செய்து இருந்தார். மகளிர் குழுவினர், பொது மக்கள் என பலரும் பங்கேற்று கிராம வளர்ச்சி குறித்து விவாதித்தனர். கூட்டத்தில் பவானி, செய்யது இப்ராகிம், ஜமாத் நிர்வாகி மர்வன் மாலிக், ரைஸ் இப்ராகிம் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாயாகுளம் ஊராட்சி:
திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் மாயாகுளம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் திருப்புல்லாணி உதவி பொறியாளர் சம்புமுத்துராமலிங்கம் பற்றாளராக பங்கேற்று கிராம வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும், நீர்நிலைகளை எப்படி பாதுகாக்க வேண்டும், குடிநீர் தேவைக்கு உரிய முறையில் அணுகினால் அரசு இலவசமாக டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்கிறது என்பது குறித்து விரிவாக விளக்கமளித்தார். ஊராட்சி செயலாளர் உதயகுமார் கிராமசபை கூட்ட ஏற்பாடுகளை செய்திருந்தார்.
இதம்பாடல் ஊராட்சி:
கடலாடி ஊராட்சி ஒன்றியம் இதம்பாடல் ஊராட்சியில கிராம சபை கூட்டம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவண்ணன் தலைமையில் நடந்தது.புதிய மேல்நிலை தொட்டி அமைக்க வேண்டும், சர்வீஸ் ரோடு புதுப்பிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மக்கள் வைத்தனர். மக்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார். ஊராட்சி செயலாளர் முகம்மது இப்ராகிம் கிராம சபை கூட்ட ஏற்பாடுகளை செய்திருந்தார்.