புதுடெல்லி:

பாகிஸ்தானிடம் சிறைபட்டு இந்தியா திரும்பிய அபிநந்தன் வர்தமானை டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்த காட்சிகள் பத்திரிகைகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அபிநந்தனை பாராட்டியும், வாழ்த்தியும் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்தும் பலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அபிநந்தன் வர்தமான் பெயரில் சில விஷமிகள் டுவிட்டரில் போலி கணக்கை தொடங்கி பதிவிட்டு வருகின்றனர்.

இதில் ஒரு போலி கணக்கில் ’எனக்கு மரியாதை அளித்து என்னை கவனித்துக் கொள்வதற்காக அம்மையாரே உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என அபிநந்தன் குறிப்பிட்டுள்ளதை போன்ற ஒரு பதிவு வெளியாகியுள்ளது. இந்த பதிவில் அரசை ஆதரித்து ஒருதரப்பினரும், அரசுக்கு எதிராக மற்றொரு பிரிவினரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், இந்த பதிவை பதிவிட்டுள்ள டுவிட்டர் பக்கம் அபிநந்தன் வர்தமானுக்கு சொந்தமானது அல்ல; போலியாக உருவாக்கப்பட்ட கணக்கு என்பதை அரசு வட்டாரங்கள் இன்று உறுதிப்படுத்தியுள்ளன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here