மீஞ்சூர், ஆக. 27 –
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் வட்டாரங்களில் வருகின்ற 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்திவிழாவை அமைதியாகவும், சிறப்பாகவும், அதே வேளையில் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படா வண்ணம் அவ்விழாவினை கொண்டாடிட அவ்வட்டரத்தில் உள்ள விநாயகர் சதுர்த்தி விழா குழுவினருடன் மீஞ்சூர் காவல்துறை சார்பில் ஆலோசனைக்கூட்டம்அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்திற்கு மீஞ்சூர் உதவி ஆணையர் முருகேசன் தலைமை வகித்தார். ஆய்வாளர் சிரஞ்சீவி, குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் சைமன்துரை, உதவி ஆய்வாளர் வேலுமணி, தனிப்பிரிவு போலீஸ் கார்த்திக், மீஞ்சூர் வட்டார விநாயகர் சதுர்த்தி விழா ஒருங்கிணைப்பு குழு தலைவர் சிவ கோகுல கிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் தங்கமணி மாவட்ட இணை செயலாளர் காசி விஸ்வநாதன், மாவட்ட அமைப்பு சாரா உடல் உழைப்பு பிரிவு சுரேஷ். உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விழா குழுவினர் கலந்து கொண்டனர். இதில் பேசிய செங்குன்றம் காவல் உதவி ஆணையர் முருகேசன் விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலைகளை எவ்வாறு அமைப்பது மற்றும் அச்சிலைகளுக்கு பாதுகாப்புகள் வழங்குவது குறித்து 24 கோரிக்கைகளுடன் விழா குழுவினர் மத்தியில் எடுத்துரைத்து விளக்கமாக பேசினார். மேலும் அக்கோரிக்கைகளில் உள்ள ஒவ்வொரு பொருள் குறித்தும் எழுத்தர் பாலாஜி மூலம் வாசிக்கச் செய்து விளக்கம் அளித்தார். அதனைத் தொடர்ந்து விழாக் குழுவினர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தவர் சிலை அமைப்பதில் எந்த ஒரு பிரச்சனையும் எழும்பக்கூடாது எனவும் குறைந்த நாட்களில் சிலை அமைத்து வழிபாடு செய்து ஐந்து தினங்களுக்குள் ஊர்வலமாக எடுத்துச் சென்று பாதுகாப்புடன் கரைக்க வேண்டுமென அக்குழுவினர்களிடம் கேட்டுக் கொண்டார்.