திருவாரூர், செப். 01 –
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பூந்தோட்டம் அருகே செதலபதி கிராமத்தில் உள்ள திருக்கோயிலில் விநாயகர் மனித முகத்துடன் ஆதி விநாயகராக காட்சியளிக்கிறார்.
திருஞானசம்பந்தர் அருணகிரி நாதர் ஆகியோரால் பாடல் பெற்ற பழமையான தலமான செதள பதியில் உள்ள ஸ்ரீ சொர்ணவல்லி சமேத முக்தீஸ்வரர் ஆலயமாகும்.
இவ்வாலயத்தின் வெளிப்புறத்தில் மேற்கு நோக்கி தனியாக அமைந்துள்ள சந்நிதியில் ஆதி விநாயகர் தும்பிக்கை இல்லாமல் மனித முகத்தோடு காட்சி அளிக்கிறார்.
இந்த ஆதி விநாயகர் கோவிலில் நேற்று நடைப்பெற்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு ஹோமம் மதியம் நடைபெற்றது. தொடர்ந்து மகா பூர்ணாஹூதியும் மேலும், ஆதிவிநாயகருக்கு பால், தயிர், மஞ்சள் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி காப்பு அணிந்து மகா தீபாரதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து இலட்சார்ச்சனை நடைபெற்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்களை தரிசனத்திற்கு இக்கோயிலில் அனுமதிக்கப்படவில்லை, இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.