காஞ்சிபுரம், மே. 06 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…

பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த 650 ஆவது நாளாக இன்று ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் இன்று நடைப்பெற்ற அப்போராட்டத்தில் அக்கிராம மக்கள் தங்கள் நெற்றியில் பட்டை நாமம் போட்டுக் கொண்டு ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் சுற்று வட்டாரத்தில் உள்ள பரந்தூர், வளத்தூர், நாகப்பட்டு, நெல்வாய், தண்டலம், மேல்பொடவூர், மடப்புரம், ஏகனாபுரம், மேலேறி, அக்கம்மாபுரம், குணகரம்பாக்கம், உள்ளிட்ட 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5746 ஏக்கர் பரப்பளவில் சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப் பெரிய விமான நிலையமாக பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதற்கான அறிவிப்புகளை மத்திய அரசு மாநில அரசு வெளியிட்டு, பல்வேறு முதற்கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க ஆரம்பக் கட்டத்தில் இருந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் விமான நிலையம் அமைக்க அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் ஊர்வலம், பேரணி, உண்ணாவிரதம், கிராம சபை கூட்டத்தில் தீர்மானம், கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு, நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு, என பல்வேறு கட்ட போராட்டங்களை கடந்த 650 நாட்களாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் கிராமத்தில் உள்ள மைதானத்தில் ஒன்று கூடி நாள்தோறும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிராம மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தாலும் மத்திய, மாநில அரசுகள் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் ஏகனாபுரம் கிராம மக்களின்  தொடர் போராட்டம் 650 வது நாளை இன்று எட்டிய நிலையில் கிராமத்தில் உள்ள ஆண்கள் நெற்றியில் பட்டை நாமம் போட்டுக் கொண்டு, 400 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மத்திய மாநில அரசுகள், விவசாய நிலங்கள், நீர் நிலைகள், குடியிருப்புகள் உள்ளிட்டவை களை அழித்து பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், விவசாயத்தையும், விவசாயிகளை காத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்து கோஷங்களை எழுப்பினார்கள். கிராம மக்களின் போராட்டம் நடைபெறுவதை ஒட்டி  ஏகனாபுரம் கிராமத்தில் தனிபிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here