முன்னாள் முதலமைச்சர் காலஞ்சென்ற கலைஞர் மு.கருணாநிதி அவர்களின்  நினைவுத்தினம் இன்று, அவரின் நினைவு நாளைப் போற்றும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை நுங்கம் பாக்கத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறை தலைமையிட வளாகத்தில் ஒரு இலட்சம் தலமரக்கன்றுகளை நடும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

சென்னை, ஆக 7 –

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை நுங்கம் பாக்கத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறை வளாகத்தில் இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் நினைவு நாளைப் போற்றும் வகையில் ஒரு இலட்சம் தலமரக்கன்றுகள் நடும் திட்டத்தைத் தொடக்கி வைத்தார் அதன் தொடக்கமாக நாகலிங்க மரக்கன்றை அவர் நட்டு விழாவினை சிறப்பித்தார்.

தமிழ்நாடு அரசு தற்போது இந்து சமய அறநிலையத்துறை வாயிலாக பக்தர்களின் வசதிக்காக பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டு கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் ஒரு இலட்சம் தலமரக்கன்றுகள் நடுவதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கோயில்கள் தோன்றுவதற்கு முன்பே இம் மரங்கள் இருப்பதால் இதற்கு தலமரம் எனப் பெயரளித்து போற்றப்படுகிறது. திருக் கோயில்களில் அந்தந்த தலமரங்களான மாமரம், புன்னை, வில்வம், செண்பகம், மருதம் போன்ற மரங்கள் நட்டுப் பராமரிக்கப் படும்.

இத்தகைய மரங்களை போற்றி பாதுகாக்கும் வகையில் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் ஒரு இலட்சம் தலமரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது.

இந்நிகழ்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஐ.ஏ.எஸ், மற்றும் அரசு உயர் பணி அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

மேலும், முன்னாள் முதல்வர் காலஞ்சென்ற கலைஞர் அவர்களின் நினைவுத் தினத்தினை ஒட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன் தொடர்ச்சியாக கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடங்களுக்கு சென்று மலர் வளையம் மற்றும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்பு கலைஞர் வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று அவர் வாழ்ந்த நினைவுகளை நினைவுக்கூர்ந்து. அந்த இல்லத்தின் முன் வைக்கப் பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மாலை மற்றும் மலர் தூவி மரியாதைச் செலுத்தினார்.

இந் நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, மு.பெ.சாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் உதயநிதி ஸ்டாலின் மரு.எழிலன், வாரியத் தலைவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here