ஜவ்வாது மலை வளர்ச்சி மற்றும் மேம்பாடு பணிகள் குறித்த கள ஆய்வு மற்றும் அனைத்து துறைகளின் ஆய்வுக் கூட்டம்
மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது
திருவண்ணாமலை, ஜூலை.28-
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தில், நேற்று (27.07.2021) மலைவாழ் மக்களின் வளர்ச்சி மற்றும் மேம் பாட்டிற்காக மேற் கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த கள ஆய்வு மற்றும் ஜமுனாமரத்தூரில் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ் தலைமையில் நடைப் பெற்றது. ஆய்வின் போது, கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மு. பிரதாப் மாவட்ட வன அலுவலர் அருண்லால், இ.வ.ப., திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் திருமதி. சந்திரா, ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் கவிதா, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் முரளி, திருவண்ணாமலை மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளர் (வணிகம்) கிருஷ்ணமூர்த்தி, வன அலுவலர் (பயிற்சி) ரபிமீனா, இ.வ.ப. மற்றும் அனைத்து துறைகளின் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் அவர்கள், மலைவாழ் மக்கள் பயன் பெறுவதற்காகவும், அரசு பேருந்துகள் இயக்குவதற்காகவும், பரமனந்தல் முதல் தென்மலை அத்திப்பட்டு வரை 38.8 கி.மீ. மற்றும் ஜமுனாமரத்தூர் முதல் அமீர்தி வரை 38.6 கி.மீ. ஆகிய வழித்தடங்களில் சாலை தடுப்புச் சுவர், பாலங்கள், சாலை விரிவாக்கம் மற்றும் மேம்படுத்தும் பணிகள் மேற் கொள்வதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த கள ஆய்வினை பரமனந்தல் தென்மலை அத்திப்பட்டு சாலையில் மேற் கொண்டார்.
மேலும், மாவட்ட ஆட்சியர் அவர்கள் தென்மலை அத்திப்பட்டு ஊராட்சி, மேல்பட்டு கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் விவசாயி விஜயகுமார் நிலத்தில் ரூ.5.93 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் தனி நபர் கிணறு மற்றும் தென்மலை அத்திப்பட்டு கிராமத்தில் ரூ.15.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அங்கன்வாடி கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் , மேல்பட்டு கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்வதற்கான முதல் தவணை கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், மாவட்ட ஆட்சியர் அவர்கள் புலியூர் கிராம அங்கன்வாடி மையத்தில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களிடம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியும், அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஜமுனாமரத்தூர் டான் பாஸ்கோ பள்ளியில், ஜவ்வாதுமலை வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்த அனைத்து துறை அலுவலர்களுடன் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
ஆய்வுக் கூட்டத்தில் ஜவ்வாதுமலை பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம், சுகாதாரம், அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவை குறித்த விரிவான ஆய்வினை மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டார். மேலும், கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்த விழிப்புணர்வினை மலைவாழ் மக்களிடம் ஏற்படுத்தி, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் ஆய்வுக் கூட்டத்திற்கு முன்பாக வருவாய்த் துறை சார்பில் 25 மலைவாழ் மக்களுக்கு இந்து மலையாளி ஜாதிச் சான்றிதழ் வழங்கினார். ஆய்வுக் கூட்டத்தில், வருவாய்த் துறை, வனத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு ஊரக வாழ்வதார இயக்கம் (மகளிர் திட்டம்), வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, சுகாதாரத் துறை, தாட்கோ, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, உள்ளிட்ட அனைத்து துறைகளின் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.