செங்கம் அக்.23-
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தளவாநாயக்கன் பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நகர திமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திமுக நகரச் செயலர் சாதிக்பாஷா தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலர்கள் பிரபாகரன், அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி பங்கேற்று நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கிப் பேசியதாவது
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்புகள் வெளியாக உள்ளன. திமுக நிர்வாகிகள் கட்சி நிர்வாகம் யாரை வேட்பாளராக அறிவிக்கிறதோ அவரை வெற்றி பெறச் செய்ய ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும்.
இந்த முறை வாய்ப்பு இல்லையென்றால் அடுத்து வரவுள்ள கூட்டுறவு சங்கத் தேர்தலில் வாய்ப்புகள் கிடைக்கும். எனவே, நிர்வாகிகள் எந்தவித பாகுபாடும் இல்லாமல் துடிப்புடன் செயலாற்ற வேண்டும். செங்கம் பேரூராட்சி திமுக தலைவர் பொறுப்பேற்க வேண்டும். அதற்கு அனைவரும் ஒற்றுமையாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத் தலைவர் முருகன், முன்னாள் துணைத் தலைவர் அப்துல்சத்தார், முன்னாள் கவுன்சிலர்கள் அப்துல்வாகித், ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.