திருவண்ணாமலை அக்.23-
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2020 – 2021 ஆம் ஆண்டில் 12 ஆயிரம் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.705 கோடி கடன் வழங்கப் பட்டுள்ளதாக இந்தியன் வங்கி மேலாண்மை இயக்குநர் சாந்திலால் ஜெயின் கூறினார்.
திருவண்ணாமலை மாவட்ட அனைத்து வங்கிகளுடன் ஒருங்கிணைந்து இந்தியன் வங்கி (முன்னோடி வங்கி சார்பில்) மாபெரும் வாடிக்கையாளர் தொடர்பு முகாம் திருவண்ணாமலை வேங்கிக்காலில் நடைபெற்றது.
இந்தியன் வங்கி பொது மேலாளர் சுரிபாபு, துணை பொது மேலாளர் சுசீலா பார்த்தசாரதி, திருவண்ணாமலை மண்டல மேலாளர் பத்மாவதி ஸ்ரீகாந்த், மண்டல துணை மேலாளர் அம்பிகாபதி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளரும் மேலாண் இயக்குநருமான காமாட்சி உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா,ஆகியோர் முன்னிலை வகிக்க மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மணிராஜ் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் இந்தியன் வங்கி மேலாண் இயக்குநர் சாந்திலால் ஜெயின் ஆகியோர் வாடிக்கையாளர் தொடர்பு முகாமினை குத்துவிளக்கேற்றி வைத்து பயனாளிகளுக்கு ரூ.76 கோடி மதிப்பில் காசோலை மற்றும் கடன் பெறவதற்கான ஆணையினை வழங்கினார்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆவின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தீபாவளி சிறப்பு பால் இனிப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தொடங்கிவைத்தார். இந்த முகாமில் இந்தியன் வங்கி மேலாண் இயக்குநர் சாந்திலால் ஜெயின் பேசுகையில் இந்தியன் வங்கி நடப்பு மாதம் முதல் நவம்பர் மாதம் 15ந் தேதி வரை முன்னோடி மாவட்டங்களில் இதுபோன்ற முகாம்களை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளது.
பல்வேறு அரசு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் வங்கி கடன் திட்டங்கள் பிரதம மந்திரியின் சுயவேலை வாய்ப்பு திட்டம் தெருவோர வியாபாரிகள் கடன் திட்டம் முத்தரா கடன் திட்டம் ஆத்மா நிர்பார் கடன் திட்டம் மற்றும் மாநில அரசு மூலம் செயல்படுத்தி வரும் வங்கி கடன் திட்டங்களில் நிலுவையிலுள்ள தகுதியான விண்ணப்பங்கள் மீது துரிதமாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2020-2021ம் ஆண்டில் 12 ஆயிரம் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.705 கோடி கடன் வழங்கப் பட்டுள்ளது. மேலும் சுய உதவிக்குழுக்களை மேம் படுத்துவற்காக புதிய கடன் திட்டத்தை அறிமுகப் படுத்தி கடன் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் ஆதரவுடனும் அனைத்து வங்கிகளின் முழு அர்ப்பணிப்புடனும் திருவண்ணாமலை மாவட்டம் மேலும் அதிக வளர்ச்சி அடையும் என்றார். முகாமில் இந்தியன் வங்கி மற்றும் பிற வங்கிகளை சேர்ந்த மேலாளர்கள் வங்கி அலுவலர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.