திருவண்ணாமலை, செப்.1-
திருவண்ணாமலை மாவட்டத்தில் பழங்குடியினர் நலத் துறை சார்பில் அரசு பழங்குடியினர் நல உண்டு மற்றும் உறைவிட 3 மேல் நிலைப் பள்ளிகள் மற்றும் 3 உயர் நிலைப் பள்ளிகள் உள்ளது. இதில் ஒரு உயர்நிலைப் பள்ளி திருவண்ணாமலையில் உள்ள சு.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்திலும், ஜமுனாமரத்தூரில் மற்ற 5 பள்ளிகளும் உள்ளது.
கொரோனா பரவலை தொடர்ந்து இன்று (புதன்கிழமை) முதல் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெற உள்ளது. தொடர்ந்து இந்த பள்ளிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று திருவண்ணாமலை மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் க.இளங்கோ நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் சு.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் பழங்குடியினர் நல உண்டு மற்றும் உறைவிட உயர் நிலைப் பள்ளியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி, தூய்மை செய்யும் பணி ஆகியவற்றை பார்வையிட்டார். மேலும் பள்ளிகளில் உடைந்து பயன்படுத்த முடியாமல் இருந்த மேஜைகளை மாற்ற உத்தரவிட்டார். தொடர்ந்து அவர் கூறுகையில், பள்ளிகளில் அரசு அறிவித்து உள்ள கொரோனா வழிகாட்டு நெறி முறைகளை முறையாக பின்பற்றுவதை தொடர்ந்து ஆய்வு செய்ய கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி பள்ளிகளில் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது என்றார். ஆய்வின் போது பள்ளி தலைமை ஆசிரியர் எம்.சாரதி, விடுதி காப்பாளினி ஏ.செல்வி, மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.