சென்னை:
அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
புரட்சித் தலைவி அம்மாவின் 71-வது பிறந்த நாளான 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு, ராயப்பேட்டை, தலைமைக் கழக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சர். ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்க உள்ளனர்.
தொடர்ந்து தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும் மாலை அணிவிக்க உள்ளனர்.
அம்மா விரும்பியபடி அவரது பிறந்தநாளை முன்னிட்டு, கழகத்தில் பல்வேறு நிலைகளில் செயல்பட்டு வரும் நிர்வாகிகள் அனைவரும் தத்தமது பகுதிகளில், கண் தானம், ரத்ததானம் செய்தல்; மருத்துவ முகாம் நடத்துதல்; கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டுப் போட்டிகளை நடத்துதல்; மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் அவர்களுக்கான கல்வி உபகரணங்களை வழங்குதல்; ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்குதல்; அனாதை இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு அறுசுவை உணவு வழங்குதல்; வேஷ்டி, சேலை வழங்குதல் உள்ளிட்ட மக்கள் மனம் குளிரும் வகையிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.