காஞ்சிபுரம், ஏப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கி பரந்தூர் பசுமை வழி விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. விமான நிலையம் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்து நிலங்களை கையகப்படுத்தும் அறிவிப்பையும் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் விவசாய நிலங்கள், குடியிருப்புகள், நீர் நிலைகள் உள்ளிட்டவை அழிக்கப்படும் என்பதால் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டங்களை கடந்த 625 நாட்களாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ந்து அடுத்தக் கட்ட போராட்டமாக நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலை புறக்கணிப்பதாக ஏகனாபுரம் கிராம மக்களும் பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு போராட்ட குழுவினர் அறிவித்திருந்தனர்.
100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் கிராம மக்களின் அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏகனாபுரம் கிராம மக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான கலைச்செல்வி மோகன், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தேர்தல் பொது பார்வையாளர் அபிஷேக் சந்திரா மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகம் ஆகியோர் இன்று வருகை புரிந்தனர்.
தேர்தல் பார்வையாளர் அபிஷேக் சந்திரா, ஏகனாபுரம் கிராம மக்களின் கோரிக்கைகளை தேர்தல் ஆணையத்திற்கும் மத்திய மாநில அரசு கொடுத்து உங்கள் கோரிக்கைகளை தெரிவிப்பதாக எடுத்துக்கூறி கிராம மக்கள் தங்களின் ஜனநாயக கடமையான தேர்தலில் வாக்களிப்பதை கட்டாயம் நிறுத்தக்கூடாது என கோரிக்கை விடுத்து வலியுறுத்தி பேசினார்.
இருப்பினும் ஏகனாபுரம் கிராம மக்கள் தேர்தல் பார்வையாளரின் கோரிக்கையினை நிராகரித்ததோடு நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதால் தங்களுக்கு எந்த விதமான பயனும் ஏற்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை என தெரிவித்தனர்.
மேலும் கிராம மக்கள் தேர்தல் பார்வையாளரின் கோரிக்கையை நிராகரித்ததால் பேச்சுவார்த்தை நடத்த வந்த மாவட்ட கலெக்டரும் தேர்தல் பார்வையாளரும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பலமுறை போராட்டங்கள் நடத்தியும் பிரதமர், அமைச்சர்கள், முதலமைச்சர் மாநில அமைச்சர்கள் என பல பேருக்கு கடிதங்கள் அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நாடாளுமன்ற தேர்தலை புறக்கனிப்போம் என தெரிவித்த நிலையில் வெறும் சம்பிரதாயத்திற்கு மட்டுமே வந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு சென்றுள்ளனர் என கிராம மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.



















