மன்னார்குடி, பிப். 01 –
காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில், கடைமடை பாசன மாவட்டமாகயிருக்கும் திருவாரூர் மாவட்டம், முற்றிலும் விவசாயத்தை மட்டுமே சார்ந்துள்ள மாவட்டமாகும்.
மேலும் இம்மாவட்டத்தில் விவசாயத்தை சார்ந்து இலட்சக்கணக்கான விவசாயிகளும், விவசாய கூலி தொழிலாளர்களும் வாழ்ந்து வருகின்றனர். இம்மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்ய மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியோடு இம் மாவட்டம் முழுவதும் சுமார் 450 க்கும் மேற்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.
தற்போது மாவட்டம் முழுவதும் அறுவடை இயந்திரங்கள் மூலமாக சம்பா, தாளடி நெற்பயிர்கள் அறுவடைக்கான பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மன்னார்குடி, நீடாமங்கலம் தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை அந்தந்த பகுதிக்கு உட்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனைக்காக ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை தினந்தோறும் கொண்டு வந்து குவித்து வருகின்றனர்.
ஆனால், விவசாயிகள் தினந்தோறும் கொண்டு வரும் நெல்மூட்டைகளை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும், தினசரி விவசாயிகளிடம் இருந்து, சுமார் 500 முதல் 600 நெல் மூட்டைகள் வரை மட்டுமே கொள்முதல் செய்து வருகிறது.
இதனால் ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஆயிரத்தில் இருந்து 5000 நெல்மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்படாமல் மலைபோல் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன.
இதனால் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள் பனிபொழிவு காரணமாக ஈரப்பதம் அதிகமாகி காணப்படுவதால், கொள்முதல் நிலைய அதிகாரிகள் 17 சதவீத ஈரப்பதம் என்ற அரசின் விதிமுறையை காரணம் காட்டி கொள்முதல் செய்யாமல் விவசாயிகளை அலைக் கழித்து வருவதால் அவர்கள் பொருளாதார இழப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இது தவிர தற்போது சென்னை வானிலை மையம் திருவாரூர் மாவட்டத்தில் வரும் 1 மற்றும் 2 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்த அவ்அறிவிப்பால் விவசாயிகள் செய்வதறியாது களக்கம் அடைந்துள்ளனர்.
மேலும், விவசாயிகள் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்துள்ள நெல்லை பாதுகாக்க வழியின்றி தனியார்களிடம் குறைவான விலைக்கு அதாவது அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்து வரும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் இப்பிரச்சினையை தமிழ்நாடு அரசு கருத்தில் கொண்டு அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் நாள் ஒன்றுக்கு குறைந்தப் பட்சம் 1000 நெல் மூட்டைகளையாவது விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மன்னார்குடி பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இப்பிரச்சனைக்கான தீர்வினை அரசு உடனடியாக எடுக்கவிடில் நெல்மணிகளை சாலையில் கொட்டி தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை எனவும் அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பேட்டி
1, ரெங்கையன் விவசாயி மன்னார்குடி
2, அருள்ராஜன் விவசாயி மன்னார்குடி


























