தஞ்சாவூர், மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா,கோடை என முப்போகம் அதிக அளவில் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம்.கடந்த ஆண்டு ஏற்பட்ட காவிரி விவகாரம் காரணமாக ஆற்று நீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் குருவை, சம்பா சாகுபடியில் பெரிதளவில் மகசூல் கிடைக்காததை அடுத்து கோடை சாகுபடிக்காக மின் மோட்டார் வைத்துள்ள விவசாயிகள் அதற்கான நடவு பணிகளை கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு துவங்கினர்..
இந்த நிலையில், தஞ்சை மாவட்டம் முழுவதும் வட மாநில தொழிலாளர்கள் பல குழுக்களாக பிரிந்து பல கிராமங்களில் நடவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஒரத்தநாடு அருகே, மேற்குவங்கம் மாநிலம், கொல்கத்தா மாவட்டம், கொலிக்ராம் கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கோடை நடவு பணிகளை மேற்கொண்டனர்.
எங்கள் ஊரில் கிடைக்கும் கூலியை விட இங்கு அதிகம் கிடைப்பதாகவும், ஒவ்வொரு சாகுபடி காலத்திலும் எங்கள் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தஞ்சை, மதுரை, புதுக்கோட்டை, விழுப்புரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நடவு பணிகளில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் இது குறித்து வட மாநில தொழிலாளர்கள் கூறுகையில் ‘ ஒவ்வொரு சாகுபடி காலத்திலும் ஏஜென்ட் மூலம் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நடவு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் ஊரிலும் விவசாயம் தான் செய்வோம் ஆனால் அங்கு பெரிதளவில் வேலையும் இல்லை, ஊதியமும் கிடைக்கவில்லை. இங்கு வேலை செய்யும் அனைவரும் ஊர்காரர்கள் மற்றும் உறவினர்களே.. தங்குவதற்கு உணவு ஏற்பாடுகள் எல்லாம் நில உரிமையாளர்கள் செய்து தருகின்றனர். அதோடு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் பலர் உதவுகின்றனர் என்று கூறினர்.






















